சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடங்கியது
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது.
பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்குவதை முன்னிட்டு, இன்று காலை நாட்டின் தேசிய ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைமை தளபதி அனில் சௌகான் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார்.
பிறகு, தேசிய ஆலோசகர் அஜித் தோவலுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில்தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இந்தியா சார்பில் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் ராய், பாகிஸ்தான் டிஜிஎம்ஓ காஷிஃப் அப்துல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்
இந்த பேச்சுவார்த்தையில், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.