கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்கு நீதி வேண்டும்! – நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி. வலியுறுத்து.

இறுதிப் போரின்போது கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு நீதி வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடந்த வாரம் உங்களுக்குத் தெரியும். இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட வாரம். முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்ற வாரம். 16 ஆண்டுகளுக்கு முன்னர் மிக முக்கியமாக இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட வாரம் தான் கடந்த வாரம்.
அவ்வாறு கொல்லப்பட்ட மக்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துவதுடன், கொல்லப்பட்ட மக்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்பார்க்கும் நீதியை – இன அழிப்புக்கான நீதியை இதுவரைக்கும் மாறி மாறி வந்த அரசுகள் தர மறுத்திருக்கின்றார்கள். இந்த அரசின் காலப்பகுதியிலும் அது நடக்கும். அந்த நீதி கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை.
இந்த நாட்டில் நடைபெற்றது ஓர் இன அழிப்பு. ஆனால், அதனைச் சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிப்பது கடினம் என்று சிலர் கூறிய கருத்துக்களை வைத்துக் கொண்டு நாட்டிலே இன அழிப்பு நடக்கவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாம் கூறுவதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக சர்வதேச ரீதியாகவும் சரி உள்நாட்டுக்குள்ளும் சரி இதற்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரதான கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சிதான். அதை மக்களின் சார்பாக நின்று தொடர்ச்சியாக நாம் செய்வோம்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள் கடந்த வாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு அரசியல் பின்னணி இன்றி தாமாக முள்ளிவாய்க்காலில் ஒன்று சேர்ந்து இருந்தார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்பட்டது. இதெல்லாம் அரசியல் பின்னணியில் நடந்த விடயங்கள் அல்ல. எங்களுடைய மக்கள் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். இதை நீங்கள் மறுக்க முடியாது.
அண்மையில் கனடாவில் இன அழிப்பு சம்பந்தமாக ஒரு சின்னம் உருவாக்கப்பட்ட போது, எமது வெளிவிவகார அமைச்சர் கனடாத் தூதுவரை அழைத்து பெரிய ஒரு விளக்கம் கொடுத்திருந்ததை நான் பார்த்திருந்தேன். ஆனால், நடக்க வேண்டியது என்ன? இந்த நாட்டிலே தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனரா? இல்லையா? என்பது உங்களுக்குத் தெரியும்.
அப்போது ஆட்சியில் இருந்தவர்களை இந்த அரசும் பாதுகாக்க நினைக்கின்றது என்றால் அது வேறு விடயம். ஆனால், ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிடும் இந்த அரசு, உண்மையில் அந்தக் குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என நினைத்தால் இந்த விடயத்துக்கு ஒத்துழைப்பை வழங்கலாம். விசாரணைகளை ஆரம்பிக்கலாம். ஆனால், உள்நாட்டு விசாரணையும் இல்லை. சர்வதேச விசாரணையும் இல்லை. தொடர்ச்சியாக தமிழ் மக்கள் நீதி இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவதுதான் இந்த அரசின் நோக்கம் என்பது எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
நாட்டின் ஜனாதிபதி நேற்று யுத்த வெற்றியைக் கொண்டாடுவற்குச் சென்றிருந்தார். கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள். ஆனால், நாட்டின் ஜனாதிபதி மறுநா . 19ஆம் திகதி போரினுடைய வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் இருக்கின்றார்.
தமிழ் மக்களின் பிரதானமான கட்சியான நாங்கள் தமிழ் மக்களுடன் இருக்கின்றோம். ஆனால் இந்த அரசு கடந்த அரசுகளைப் போன்றே வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றது.
இந்த அரசுக்குத் தமிழ் மக்கள் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டி இருக்கின்றார்கள். இனி வரும் காலங்களிலும் தமிழ் மக்கள் அந்த விடயத்தைச் சரியாகச் செய்வார்கள்.” – என்றார்.