தமிழின அழிப்பு நினைவகம்: காலப் பெறுமதி மிக்க செயல் – கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் தெரிவிப்பு.

“கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப் பெறுமதி மிக்க செயல். அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸிடம் நேற்று நேரில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கனேடியத் தூதுவரிடம் கடிதம் ஒன்றையும் சிறீதரன் எம்.பி. கையளித்துள்ளார்.
மேற்குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானிக்கும், பிரம்டன் நகர மேஜர் பற்றிக் பிரவுணுக்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே நேற்று கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பியால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கைத்தீவின் அளவில் சிறிய தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் தமிழ்த் தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடான கனடாவின் பிரம்டன் நகரில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி நிறுவப்பட்டு, வலிசுமந்த மாதமான மே மாதத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்துள்ளதை நன்றியோடு பதிவு செய்கின்றேன்.
ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் அறமீறல்கள் குறித்தும், போர் முடிவுற்றதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் எமது மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிலும் கரிசனையோடிருக்கும் கனேடிய அரசினால், ஈழத் தமிழினம் சார்ந்து சமகாலத்தில் முன்னகர்த்தப்படும் காத்திரமான செயல்களும், அறிவிப்புகளும் சர்வதேச அரங்கிலும், தமிழ் மக்கள் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகின்றது.
தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்குப் பரிகார நீதியைக் கோரி நிற்கின்ற எங்கள் இனம், கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றங்களை மட்டுமே எதிர்கொள்ள நேர்ந்திருக்கின்றது.
இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தலைப்படாத உலக அரங்கில், ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே’ என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதோடு, இறுதிப் போரின்போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களைச் சந்தித்தோருக்காகவும் தொடர்ந்து நீதி கேட்கும் கனடா, தனது நாட்டின் முதன்மை நகரான பிரம்டனில் ஈழத்தமிழர்களின் அரசியல் தாகத்தை சொல்லும் தமிழீழக் குறியீட்டுடன் கூடிய நினைவுத்தூபியை நிறுவியமையும், தமிழினப் படுகொலையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கனடாவிலிருந்து தாராளமாக வெளியேறலாம் என்ற பிரம்டன் நகர மேயரின் அறிவிப்பும் ஈழத்தமிழர்களுக்கான நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தியிருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் நேரடிக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் இராணுவப் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமை, தமிழினப் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு, நினைவுத்தூபி அமைப்பு, உயிர் அச்சுறுத்தல்களால் புலம்பெயரும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கல் என ஈழத்தமிழர்கள் சார்ந்து தங்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை செயல்களும், எமது இனத்தின் அரசியல் விடுதலையில் கனடா நாட்டின் பங்களிப்பு கனதிமிக்கதாக இருக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையை எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கியிருக்கின்றது.
அந்த நம்பிக்கைக்கான சாட்சியமாக, இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதிலும், எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளிலும் தங்களது இராஜதந்திர வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்கள் எமக்கு துணை செய்யும் என்ற நம்பிக்கையின் செய்தியாக, மீளவும் ஈழத்தமிழர்கள் சார்பிலான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.