கிளி. பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுரேன் ஏகமனதாகத் தெரிவு – தமிழரசுக்கு எதிராக எந்தக் கட்சியும் போட்டியிடவில்லை.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராகச் சுப்பிரமணியம் சுரேன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சுப்பிரமணியம் சுரேனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது ஏனைய கட்சிகளில் இருந்து எவரின் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. இந்நிலையில், சுப்பிரமணியம் சுரேன் தவிசாளராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்

உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிவகுரு செல்வராசா தெரிவு செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 3 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக 3 உறுப்பினர்களும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக ஓர் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.