வவுனியா வடக்கு பிரதேச சபையை இன்று கைப்பற்றிய தமிழரசுக் கட்சி – தவிசாளராக திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தெரிவு.
வவுனியா வடக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதன் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் ஒருவரைப் பிரேரேரிக்குமாறு கோரப்பட்ட நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி பிரேரிக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஞானமுத்து அகிலன் பிரேரிக்கப்பட்டார்.
தவிசாளராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டமையால் வாக்கெடுப்பின் மூலம் அதனைத் தெரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா அல்லது பகிரங்கமாகவா நடத்துவது என ஆணையாளரால் கோரப்பட்டது
இதன்போது தெரிவுகளை இரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அல்லது இரகசிய வாக்கெடுப்பா அல்லது பகிரங்க வாக்கெடுப்பா என்பதை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்துமாறு கேட்டனர். அதற்கு ஆணையாளர் மறுப்புத் தெரிவித்த நிலையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தொழிலாளர் கட்சியின் இரு உறுப்பினர்கள் என 8 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் மீதம் 15 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தெரிவுகளைப் பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது.
அந்தவகையில் தவிசாளராகப் பெயர் பிரேரிக்கப்பட்ட கிருஸ்ணவேணிக்கு 15 வாக்குகள் ஆதரவாகக் கிடைக்கப் பெற்றன. அவருக்குத் தமிழரசுக் கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 வாக்குகளும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்சின் 4 வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்குமாக 15 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன.
வெற்றி பெறுவதற்கு 12 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 15 வாக்குகள் கிடைக்கப் பெற்ற கிருஸ்ணவேணி புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உப தவிசாளராக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. உப தவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சஞ்சுதன் போட்டியின்றி உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
