கொள்ளையர் சங்கிலியை அறுத்தபோது படுகாயமுற்ற வயோதிப மாது உயிரிழப்பு.
மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகர், நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இந்த வயோதிபப் பெண் தனது வீட்டின் முன்னாள் உள்ள வீதியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்தநிலையில் அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து வீதியில் வீழந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நீதிவான் இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று விசாரணை செய்தார். சடலம் வைக்கப்பட்டிருக்கும் மட்டு. போதனா வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டமையுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.
இதேவேளை இந்தக் கொள்ளையர்களை வலைவிரித்துத் தேடி வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
