அநுர அரசாங்கத்தில் முதல் தடவையாக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!
3 அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்
ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2026 வரவு – செலவுத் திட்டத்துடன் இணைந்ததாக அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளைத் துரிதமாகவும் செயற்றிறனுடனும் முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் கீழ் நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் பத்து பிரதி அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.
* பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
* அநுர கருணாதிலக – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
* வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
* கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
* டி.பி. சரத் – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
* எம்.எம். மொஹம்மட் முனீர் – சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்
* எரங்க குணசேகர – நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
* வைத்தியர் முதித ஹன்சக விஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்
* அரவிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
* எச்.எம். தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
* யூ.டீ. நிஷாந்த ஜயவீர – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
* கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன – வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்
* எம்.ஐ.எம். அர்கம் – வலுசக்தி பிரதி அமைச்சர்












