பேரிடர் பாதிப்பில் இருந்து இலங்கை மீண்டெழ ஜனவரியில் சர்வதேச நன்கொடையாளர் மாநாடு.
டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களிடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
“பேரிடரால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் உலக வங்கியின் ஆரம்ப கட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்னரே, துல்லியமான தரவுகளை நோக்கி நகர முடியும்.
கடனை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு அவகாசம் வழங்குவதற்குச் சில நாடுகள் முன்வந்துள்ளன.
எனவே, குறுகிய காலப் பகுதிக்குள் இலங்கையால் மீண்டெழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றும் வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கையின் எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
