பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை: முன்னாள் இராணுவச் சிப்பாய் உட்பட இருவர் ஹெரோயினுடன் சிக்கினார்கள்.

கொழும்பு – பெல்லன்வில நடைபாதை பகுதிக்கு அருகில் உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக் படுகொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் உட்பட இரு சந்தேகநபர்கள், ஹெரோயின் போதைப்பொருளுடன் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை – போரலஸ்கமுவ வீதியில் அமைந்துள்ள பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள உணவகம் ஒன்றின் முன்பாக நின்றிருந்த அதன் உரிமையாளரை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர், உடனடியாகக் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பெல்லன்விலைப் பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடையவர் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூடு காரணமாக அவரது வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்துத் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்யப் போரலஸ்கமுவ பொலிஸாரும், கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையிலேயே, ரணால பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நவகமுவ பொலிஸ் குழுவினர், மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பகமுனைப் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், அவர்கள் பயணிக்கப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் ‘கொஸ் மல்லி’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் உறவினர் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், அவருக்கு எதிரான பாதாள உலகக் குழுவினால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரு குழுக்களுக்கு இடையே நிலவி வந்த தனிப்பட்ட பகை காரணமாகவே இப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நவகமுவ மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.