தையிட்டியில் பொலிஸாரின் அராஜகம்: தமிழ் மக்கள் கூட்டணி கடும் கண்டனம்!

யாழ். தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம், நாடு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்கின்றது எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின்போது, பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தி அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர்.

மதகுருவான வேலன் சுவாமியை மிலேச்சத்தானமாகத் தாக்கி, அவரைக் காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனையும் தள்ளி விழுத்தியுள்ளனர். அத்துடன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வரை அடித்து இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அராஜகம் செய்துள்ளனர்.

பொலிஸாரின் இந்த அராஜகத்தை தமிழ் மக்கள் கூட்டணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

பொலிஸாரின் இந்தச் செயற்பாடானது நாடு இரண்டாகப் பிளவுபட்டு உள்ளமையையே காட்டி நிற்கின்றது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும், சிங்கள பௌத்த தீவிரவாத போக்கில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான பிரச்சினையின்போது பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்தார். அதற்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காது அமைதி காத்தனர். ஆனால், தையிட்டியில் நின்ற பொலிஸார், வேலன் சுவாமிகளை மிலேச்சத்தானமாகத் தாக்கி கைது செய்துள்ளனர். வேலன் சுவாமி ஒரு பௌத்த பிக்குவாக இல்லாதமைதான் இதற்குக் காரணம். வேலன் சுவாமிகளுடன் நடந்து கொண்டது போன்று ஒரு பௌத்த பிக்குவுடன் பொலிஸாரினால் நடந்துகொள்ள முடியுமா ??

வேலன் சுவாமி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் தம் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அவர்கள் அவ்வாறு பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பின் சட்டத்தரணி என்ற ரீதியில் நாமும் எமது கட்சியும் பக்க பலமாக அவர்களுக்காக நிற்போம் என இவ்விடத்தில் உறுதி கூறுகின்றேன்.

அதேவேளை, வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடமும் அன்பான கோரிக்கை ஒன்றை விடுகின்றேன், உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சாதாரண குடிமகன் ஒரு கட்டடத்தை அமைக்கும் போது , பிரதேச சபையின் அனுமதி பெறாதுவிடின் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கின்றீர்கள், அதேபோன்று தையிட்டி விகாரையில் நடைபெறும் சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.