டக்ளஸுக்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதிவான் முன்னிலையில் அவர் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு பாதாள உலகக் குழு உறுப்பினரான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கடந்த 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
மாகந்துர மதூஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்தது.
இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி காணாமள்போனமை குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையால் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் 72 மணி நேர பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவரின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 15 ரி – 56 ரக துப்பாக்கிகள், 4 கைத்துப்பாக்கிகள் அவற்றுள் அடங்குகின்றன. அந்தத் துப்பாக்கிகள் எங்கே என்பது குறித்த விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
