சு.கவின் எதிர்காலம் 17ஆம் திகதி நிர்ணயம்! – தலைமையில் மாற்றம் வேண்டும் என்கிறார் தயாசிறி.

”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான வழக்குத் தீர்ப்பு எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இது கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வழிகாட்டும். சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அதன் தலைமைத்துவத்தில் மாற்றம் அவசியமானது.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் என எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு கட்சியை ஒரு செயலிழந்த நிலையில் வைத்துள்ளது.

தற்போது கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றி வைத்துள்ளவர்களுக்கு எந்தவொரு சட்டபூர்வமான அதிகாரமும் இல்லை. அடிமட்டத் தொண்டர்கள் கட்சி மீண்டும் புத்துயிர் பெறுவதற்காகக் காத்திருக்கின்றார்கள்.

சுமார் 30 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவிதியை இந்தத் தீர்ப்பு தீர்மானிக்கும். நீதித்துறை மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.