இலங்கையில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

பொலிஸ்மா அதிபரின் விசேட அறிவுறுத்தலுக்கமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது சுமார் 31 ஆயிரத்து 525 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 429 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 203 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 96 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 560 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.