இலங்கை எல்லைக்கு அருகே மற்றுமொரு ஈரானியக் கப்பல் தெற்குக் கடற்பரப்பில் மீண்டும் பரபரப்பு பாதுகாப்பு அமைச்சு தீவிர கண்காணிப்பு.
இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் ஏற்கனவே ஒரு ஈரான் கப்பல் அமெரிக்காவின் தாக்குதலுக்குள்ளாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மற்றுமொரு ஈரான் கப்பல் இலங்கைக்கு மிக அருகாமையில் தென்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்துக்குள் இந்தக் கப்பல் நிலைகொண்டுள்ளதை அரசும் பாதுகாப்பு அமைச்சும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய அவசரக் கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தத் தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-
“மற்றுமொரு ஈரான் கப்பல் எமது கடல் எல்லைக்கு மிக அண்மித்த சர்வதேசப் பகுதியில் இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். பாதுகாப்பு அமைச்சு இது குறித்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது. இந்தக் கப்பல் தற்போது எமது நேரடி கடல் எல்லைக்குள் இல்லை என்றாலும், அதில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.
கப்பலில் உள்ளவர்களின் உயிர்களைக் காப்பதற்கும், தேவையேற்படின் உடனடித் தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அரசு தயார் நிலையில் உள்ளது. இதற்கான விசேட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் இது தொடர்பான முழுமையான விவரங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும்.” – என்றார்.
ஏற்கனவே தாக்குதலுக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து 80 இற்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு ஈரான் கப்பல் தென்பட்டிருப்பது பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சர்வதேச அவதானிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
