ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்தது நாங்களே! – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு.
இலங்கையின் தென் கடற்பரப்பில் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 மைல் தொலைவில், ஈரானியக் கடற்படையின் அதிநவீன ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ என்ற போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமைக்குத் தாமே காரணம் என்று அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட ஏவுகணை மூலம் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு நீர்மூழ்கிக் கப்பலால் எதிரி நாட்டுப் போர்க்கப்பல் வேட்டையாடப்பட்ட முதல் வரலாற்றுச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இத்தாக்குதலை அமெரிக்காவே நடத்தியதாகப் பென்டகனில் வைத்துப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனை “அமைதி மரணம்” என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
“சர்வதேச கடற்பரப்பில் தங்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாக ஈரான் நினைத்தது. ஆனால், எங்கள் நீர்மூழ்கிக் கப்பல் அதனைச் சத்தமின்றி முடித்துவிட்டது.” – என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன ‘மார்க் 48’ ரக ஏவுகணை மூலமே ஈரான் போர்க்கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 180 பேரில் 87 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 61 பேர் இன்னமும் மாயமாகியுள்ளனர்.
உயிருடன் மீட்கப்பட்ட 32 மாலுமிகள் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படைப் பயிற்சியை முடித்துக்கொண்டு ஈரான் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த இந்தக் கப்பல், இன்று (04) அதிகாலை 5:08 மணியளவில் அபாய சமிக்ஞையை விடுத்தது. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் வைத்து சின்ஹா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் “ஒபரேஷன் எபிக் பியூரி” என்ற 5 ஆவது நாள் போரின் ஓர் அங்கமாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகின்றது.
இலங்கை அரசு இந்தச் சம்பவத்தை ஒரு ‘தாக்குதல்’ என்று நேரடியாகக் குறிப்பிடாமல், 1979 சர்வதேச கடல்சார் ஒப்பந்தத்தின்படி மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
“பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதே எமது முதன்மை நோக்கம்” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் பாதுகாப்பு வலயத்துக்குள் இத்தகைய பாரிய தாக்குதல் எப்படி அனுமதிக்கப்பட்டது?” என்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து எஞ்சியுள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. சடலங்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் விசேட பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
