இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பேணுவதே அரசின் இலக்கு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் அரசியல் இலாபம் தேடாதீர்கள்!! – எதிர்க்கட்சிகளுக்கு ஆளுங்கட்சி அறிவுறுத்தல்.

“இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதியைப் பேணுவதே எமது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும். இதற்காகத் தேவையான அனைத்துத் தலையீடுகளையும் நாம் முன்னெடுப்போம்” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லையில் ஈரான் போர்க்கப்பலொன்று தாக்குதலுக்கு இலக்கான விவகாரம் தொடர்பிலேயே அவர் வினா எழுப்பி இருந்தார்.

இதற்கு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால், சர்வதேச எல்லைப் பகுதியில் அனர்த்தத்துக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து இதுவரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துரதிஷ்டவசமாக, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த 87 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சடலங்களைச் சிதைவடையாமல் பாதுகாப்பதற்காக, தனியார் துறையிடமிருந்து இரண்டு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்து சமுத்திரத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை உரிய தலையீடுகளை மேற்கொள்ளும். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்துக்குத் தொடர்ந்து அறிவிக்கப்படும். நாம் சர்வதேச சட்டங்கள் மற்றும் மனிதாபிமான விழுமியங்களின் அடிப்படையிலேயே இந்த மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

இந்த விவகாரத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. எனவே, இது குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிடாமல் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.