ஈரான் கப்பல் விவகாரம்: அழிவைத் தடுத்த அநுர! – சஜித் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வாசு வலியுறுத்து.

ஈரான் கப்பல் விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுத்துள்ள தீர்மானங்கள் மற்றும் நெருக்கடி முகாமைத்துவமானது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலக அரசியல் தற்போது பற்றி எரிகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இணைந்து முழு உலகின் அமைதிக்கும் எதிராகச் செயற்படுகின்றார்கள்.

இந்தியாவில் இராணுவப் பயிற்சிக்காகச் சென்ற ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியமை அதன் கோழைத்தனமான போக்கை வெளிப்படுத்துகின்றது. இது சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் மீதும் சில விமர்சனங்களை எழுப்பியுள்ளது.” – என்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுடன் ‘சோபா’ ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட எடுத்த முயற்சி குறித்தும் இதன்போது அவர் எச்சரித்தார். அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால், இலங்கை இன்று நேரடிப் போர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தற்போதைய இக்கட்டான சூழலில், ஈரான் கப்பல் விவகாரத்தை ஜனாதிபதி சர்வதேச சட்டங்களுக்கு அமையக் கையாண்டுள்ள விதம் பாராட்டத்தக்கது. இதனை அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது பதவிக்கு ஏற்றாற்போல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.” – என்றும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.