இன்னும் இரண்டு வாரங்களில் மின் தடை ஏற்படும் அபாயம்! – நாடாளுமன்றில் மொட்டுக் கட் சி எச்சரிக்கை.
இலங்கையில் நிலவும் டீசல் தட்டுப்பாடு மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பின்னடைவு காரணமாக, இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் மின்சாரத் தடையை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க எச்சரித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதியாகும் போது நாட்டில் டீசல் இருப்பு தீர்ந்துவிடும் அபாயம் உள்ளது. தற்போது வந்துள்ள கப்பல்களில் பெரும்பாலும் பெற்றோலே காணப்படுகின்றது. பெற்றோல் வாகன நுகர்வுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், மின்சார உற்பத்தியில் டீசல் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
மின்சார சபையின் ‘சிஸ்டம் கண்ட்ரோல் சென்டர்’ அறிக்கைகளின்படி, மின்சார உற்பத்தியில் முதலில் குறைந்த செலவுடைய நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரமே பயன்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே நிலக்கரி மற்றும் டீசல் மின் உற்பத்திக்குச் செல்ல வேண்டும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகளால் டீசலை அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் தரமற்ற நிலக்கரி காரணமாக, அங்கிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் சுமார் 150 மெகாவாட் குறைவடைந்துள்ளது.
நுரைச்சோலையில் இருந்து முழுமையான 810 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருந்தால், மின் உற்பத்திக்கு ஒரு லீட்டர் எண்ணெய் கூடத் தேவைப்பட்டிருக்காது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த 150 மெகாவாட் மின்சாரக் குறைபாட்டை ஈடுகட்ட வாரத்துக்கு 35 இலட்சம் லீற்றர் டீசலும், மாதத்துக்கு 140 இலட்சம் லீற்றர் டீசலும் மேலதிகமாகச் செலவாகின்றது.” – என்றார்.
மின்சார சபையின் உத்தியோகபூர்வ அறிக்கைகளைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர், தற்போதைய எரிபொருள் கையிருப்பு மற்றும் உற்பத்தித் திறனைக் கருத்தில் கொள்ளும்போது, இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் நாடு மீண்டும் மின்சாரத் தடையை நோக்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
