பஸ் கட்டணங்கள் 10 வீதத்தால் உயர்வு? – அமைச்சரவையில் இன்று இறுதி முடிவு.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக நிலவும் நெருக்கடியான சூழலைக் கருத்திற்கொண்டு, பஸ் கட்டணங்களை 10 வீதத்தால் அதிகரிப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ யோசனையை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களை உயர்த்துமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில், நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பஸ் உரிமையாளர்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போதே, தற்போதைய செலவீனங்களுக்கு ஏற்ப 10 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன், புதிய பஸ் கட்டண விவரங்கள் மற்றும் அது நடைமுறைக்கு வரும் திகதி என்பன குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
