சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூட்டுப் பொறிமுறை – ஜனாதிபதி தலைமையில் விசேட தீர்மானம்.

சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கைதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும், அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்தும் ஆராய்வதற்காக கூட்டுப் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 33 சிறைச்சாலைகளுக்கும் உரிய வகையில், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறையொன்று எதிர்வரும் வாரத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.