செம்மணிப் புதைகுழிப் பேரவலம்: 100 நாள்களை எட்டிய அகழ்வுப் பணிகள்! 500 ஐக் கடந்த மனித எலும்புக்கூடுகள்!!

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியான யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் நேற்றுடன் 100 நாள்களை எட்டியுள்ளதுடன், இதுவரை மொத்தம் 507 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 46ஆம் நாள் அகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

நேற்றைய அகழ்வின் போது புதிதாக 8 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை கண்டறியப்பட்ட 507 மனித என்புத் தொகுதிகளில், 501 தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின்போது, சிறுமி ஒருவரின் என்புத் தொகுதியில் இரு பக்கங்களிலிருந்தும் இரு காப்புகளும், ஊசி ஒன்றும் சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டு நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின்போதும் என்பு எச்சங்கள் குவியல்களாகவே மீட்கப்பட்டன. இதன் மூலம் இதுவரையான காலப்பகுதியில் குவியல்களாக எடுக்கப்பட்ட என்பு எச்சங்களின் எண்ணிக்கை 40 ஆகும்.

இதனிடையே, செம்மணிப் புதைகுழியில் எழுமாறாகத் தோண்டப்பட்ட இரு குழிகளில் முதலாவது குழியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாள்களில் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் குறித்து நிபுணர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 100 நாள்கள் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.