உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: சஹ்ரானே பிரதான சூத்திரதாரி! போதியளவு ஆதாரங்கள் உண்டு!! – இப்படி கம்மன்பிலவின் புதிய நூல் வெளியீட்டில் தகவல்.

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என்பது தர்க்க ரீதியாகவும், சாட்சியங்கள் ஊடாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவரால் எழுதப்பட்ட “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள மூளையைத் தேடி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேடையில் கலந்துகொண்டமை அரசியல் அரங்கில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற போது ஆட்சியில் இருந்தவர்கள் மற்றும் அதன் பின்னரான விசாரணைகளை முன்னெடுத்தவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

உதய கம்மன்பிலவின் உரையில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள் வருமாறு:-

“இந்தத் தாக்குதலுக்காக சுமார் 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான நிதியை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முஹம்மத் இப்ராஹிம் வழங்கியிருந்தார்.

வெடிபொருட்களைத் திரட்டியது, குண்டுதாரிகளைத் தெரிவு செய்தது மற்றும் தாக்குதலுக்கான இடங்களைத் தீர்மானித்தது என அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் சஹ்ரான் ஹாசீமே முன்னின்று கையாண்டுள்ளார்.”

இந்தத் தாக்குதலானது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தேவைக்காகவே சஹ்ரானால் முன்னெடுக்கப்பட்டது. நான் இங்கு வெளிப்படுத்தும் தகவல்கள் அமெரிக்க நீதிமன்றில் சாட்சியங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைகளைத் திசைதிருப்பச் சிலர் முயன்றாலும், சஹ்ரானே இதன் சூத்திரதாரி என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன.” – என்றார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள், அதன் பின்னாலுள்ள மர்மங்கள், குண்டுதாரிகள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள் மற்றும் குண்டுகள் தயாரிக்கப்பட்ட விதம் குறித்த பல இரகசியத் தகவல்களை இந்த நூலில் கம்மன்பில சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.