எமது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் நாடகம்! – பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க சாடல்.

அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களைச் சகித்துக்கொள்ள முடியாமலும், தமது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவுமே எதிர்க்கட்சிகள் தற்போது கைகோர்த்துச் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன” என்று பௌத்த விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் மேலும் கூறுகையில்,

“உலகில் எங்குமே இல்லாத வகையில் மிகவும் முதிர்ச்சியற்ற மற்றும் சிறுபிள்ளைத்தனமான ஒரு எதிர்க்கட்சியே இலங்கையில் உள்ளது. நாட்டில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் ஈரானியப் போர்ச் சூழலால் உருவாகியுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எப்படியாவது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற குறுகிய நோக்குடன் அவர்கள் செயற்படுகின்றனர்.

கடந்த காலங்களில் பாம்பும் கீரியும் போல் பரம எதிரிகளாகப் பிரிந்து செயற்பட்ட எதிர்க்கட்சியினர், இப்போது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஒரே மேடையில் ஒன்றுகூடி நாடகமாடுகின்றனர். அரசாங்கத்தின் திட்டங்கள் வெற்றியடைவதால் தமது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்ற பயமே இந்தத் திடீர் ஒற்றுமைக்குக் காரணமாகும்.

அண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவரால் (உதய கம்மன்பில) புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வுக்கு அனைத்து எதிர்க்கட்சியினரையும் வரவழைத்து, ஏதோ பெரிய விந்தையான கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போன்ற மாயையை அவர் ஏற்படுத்தினார். இவை அனைத்தும் திட்டமிட்ட நாடகங்களாகும்.

அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வீதியில் இறங்கிப் போராடத் திட்டமிட்டு வருகின்றன. எனினும், மக்களின் ஆதரவுடன் இந்தச் சூழ்ச்சிகளை அரசாங்கம் முறியடிக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.