வலுசக்தி அமைச்சருக்கு இன்று அக்னிப் பரீட்சை! – நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று மாலை வாக்கெடுப்பு.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. விவாதத்தின் முடிவில் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்குப் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும், இதில் பாரிய ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஊழலை நாட்டுக்கு வெளிப்படுத்துவதே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதன்மை நோக்கம் என்று எதிர்க்கட்சித் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்குத் தேவையான பெரும்பான்மைப் பலம் இருப்பதால், இந்தப் பிரேரணையை இலகுவாகத் தோற்கடிக்க முடியும் என்று அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று ஆளுங்கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இன்றைய வாக்கெடுப்பின் முடிவு நாட்டின் அரசியல் மற்றும் வலுசக்தித் துறையில் முக்கிய பேசுபொருளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
