போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: ஒரே நாளில் ஆயிரம் பேர் சிக்கினர்!

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நாடு தழுவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சோதனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புகளின் போது, போதைப்பொருள்களுடன் தொடர்புடைய 1,014 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் ஒருவரும், சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளின் கீழ் இருவர் உட்பட 1,006 விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 301 கிராம் ஹெரோயின், 701 கிராம் ஐஸ், 574 கிராம் கஞ்சா, 100 கஞ்சா செடிகள், 5 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,020 போதை மாத்திரைகள், 444 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை முற்றாக முடக்கும் நோக்கில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் ஊடாக, இந்த சட்டவிரோத வியாபாரத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.