வயலுக்குச் சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை பகுதியில், வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரி, குளத்துமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலைக்கிடையே, மேற்படி விவசாயி தனது வயல் நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரைத் தேடி வயல் பகுதிக்குச் சென்றுள்ளனர். இதன்போது, அங்குள்ள கால்வாய் ஒன்றில் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வாழைச்சேனை பொலிஸார், ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியைப் பெற்று, சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் எதிர்பாராத விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.