ம.பி. அருகே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

கோட்டா,

திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் மத்திய பிரதேச மாநிலம் விக்ரம்கர் அலோட் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரெயிலின் பி1 ஏச் பெட்டி மற்றும் என்ஜின் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயை முன்கூட்டியே கண்டறிந்த பணியாளர்கள், உடனடியாக ரெயிலை நிறுத்தினர். இதனையடுத்து ரெயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே கோட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

68 பயணிகள் பணித்த பி 1 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அனைத்துப் பயணிகளும் ரெயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவாமல் இருக்க, தீப்பிடித்த பெட்டி ரெயிலிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மின் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

திடீர் விபத்தின் காரணமாக அந்தப் பாதையில் வரவிருந்த ஜெய்ப்பூர் – மும்பை சென்ட்ரல் விரைவு ரெயில் மஹித்பூர் ரோடு ரெயில் நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டது. தடம் சீரமைக்கப்படும் வரை பயணிகள் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் பல முக்கிய ரெயில்களும் ஆங்காங்கே வெவ்வேறு நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. விபத்து நடந்த பகுதியைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

பயணத்தைத் தொடர தீப்பிடித்த பெட்டியிலிருந்த பயணிகளை மற்ற பெட்டிகளில் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்துவரும் கோட்டா ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவித்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.