நாற்காலி கொள்வனவு மோசடி: முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

தென் மாகாண சபைக்கு நாற்காலிகள் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி விவகாரம் தொடர்பில், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா உள்ளிட்ட இரு சந்தேகநபர்களைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதிவான், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளின் அடிப்படையில் அவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

மேலும், சந்தேகநபர்கள் இருவரும் தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாநகர சபைக்குள் நுழைவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளை, இந்த வழக்கின் முதலாம் பிரதிவாதியை எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாகாணத்திலுள்ள தன்னார்வத் தொண்டுச் சங்கங்களுக்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்காக 16.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, முன்னாள் முதலமைச்சர் நேற்றுமுன்தினம் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அரசின் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாது, குறிப்பிட்ட ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்குச் சாதகமாகச் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வாறு விதிமுறைகளை மீறி கொள்வனவு செய்யப்பட்ட 16 ஆயிரத்து 361 நாற்காலிகளை, தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததன் ஊடாக, அரசுக்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.