4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணியை வீட்டுக்கு அனுப்பிய பராகுவே அணி.
உலகக் கோப்பை கால்பந்து, ‘ரவுண்ட் 32’ நாக் அவுட் போட்டியில், 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணியை, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் பராகுவே அணி மண்ணைக் கவ்வச் செய்து, வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்றில் நடந்த ஆட்டத்தில், ஜெர்மனி – பராகுவே அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அனல் பறந்த இந்த ஆட்டத்தின் 42வது நிமிடத்தில், பராகுவே வீரர் ஜூலியோ என்சிசோ தலையால் முட்டி ஒரு அபார கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 0-1 என பின்தங்கியது. அதிர்ச்சியடைந்த ஜெர்மனி, இரண்டாவது பாதியில் ஆட்டத்தை வேகப்படுத்தியது. இதற்கு பலனாக, 53வது நிமிடத்தில் ஜெர்மனியின் காய் ஹாட்வெர்ட்ஸ் ஒரு கோல் அடித்து 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தார்.
இதன் பின் ஜெர்மனி அடித்த மற்றொரு கோலை, பராகுவே கோல்கீப்பரை பவுல் செய்ததாகக் கூறி ‘வார்’ தொழில்நுட்பம் மூலம் நடுவர் ரத்து செய்தார். கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கொண்டு வரப்பட்டது.
உலகக் கோப்பை வரலாற்றில் பெனால்டி ஷூட்-அவுட்களில் எப்போதும் சிறப்பாக செயல்படும் ஜெர்மனி, இந்த முறை மொத்தமாக சொதப்பியது. ஜெர்மனி தரப்பில் முதல் வாய்ப்பிலேயே காய் ஹாட்வெர்ட்ஸ் கோல் அடிக்கத் தவறினார். மொத்தம் 3 வாய்ப்புகளை ஜெர்மனி கோட்டைவிட்டது.
பராகுவே அணி 2 வாய்ப்புகளை தவறவிட்டாலும், இறுதியாக 4-3 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
