ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது குறித்து முதல் கூட்டுக்குழு கூட்டத்தை கூட்டி ஈரானும், ஓமனும்..

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, தற்காலிக அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போரின்போது, ஈரான் மற்றும் ஓமனை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு முடக்கியது. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக குழப்பங்கள் உள்ளன. இந்த ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டி வருகிறார்.

மேலும், ஏற்கனவே இருந்ததுபோல், எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், கட்டணம் வசூலிக்கப் போவதாக ஈரான் கூறி வருகிறது.

மேற்காசியாவில் நிலவி வரும் இந்த பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஈரானும், ஓமனும் கூடி ஹார்முஸ் ஜலசந்தி நிர்வாகம் உட்பட பல பிரச்னைகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தின. இந்த முதல் கூட்டுக்குழு கூட்டம், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது.

ஈரான் சார்பில், அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் காசெம் காரிபாபாடி தலைமையிலான குழுவினரும், ஓமன் சார்பில் அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் அப்துல் அஜீஸ் அல் ஹினாய் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.

ஈரான் – ஓமன் இடையேயான இச்சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.