இலங்கையில் 80 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – உயிரிழப்புகள் 59 ஆக உயர்வு.

இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தில் கடந்த 23 நாள்களில் மட்டும் 24 ஆயிரத்து 739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவது தெளிவாகின்றது.

டெங்கு நோய்ப் பரவலைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் 42 ஆயிரத்து 414 டெங்கு நோயாளர்களும், தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 154 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருநாகல், அம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவிக்கையில்,

“நேற்றுமுன்தினம் மாத்திரம் 198 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் அறிகுறி ஏற்படுமாயின் நோயாளர் கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டும்.

டெங்கு நோய் உறுதிப்படுத்தப்படும் வரை தகுதியான மருத்துவர் ஒருவரை நாடி, அவரின் ஆலோசனைக்கு இணங்க இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், மருத்துவர் அறிவுறுத்தும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெறுவதும் அவசியமாகும்.

முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறும்போதே நோய் நிலைமை தீவிரமடைவதுடன், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கின்றது. எனவே, உரிய நேரத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் டெங்கு மரணங்களைக் முழுமையாகக் குறைத்துக்கொள்ள முடியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.