பள்ளி விடுதியில் 6 மாணவிகளை கடித்த பாம்பு: 3 பேர் பலி!

மும்பை,

மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் உள்ள அரசு உதவி பெறும் உறைவிடப் பள்ளியில் பாம்பு கடித்ததில் 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனோரா தாலுகா, ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதியில் நேற்று இரவில் மாணவிகள் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அறைக்குள் நுழைந்த பாம்பு அங்கிருந்த 6 மாணவிகளை கடித்தது.

இதில் 8, 12 மற்றும் 14 வயதுடைய மூன்று மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் மூன்று மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் அவர்களது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது, மாணவர்கள் தங்கியிருந்த இடத்தில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தனவா? பள்ளி நிர்வாகம் தேவையான பாதுகாப்பு விதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததா? என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் அவிஷ்யந்த் பாண்டா தெரிவித்துள்ளார்.

மேலும், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் குழுக்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தேவையான தகவல்களைச் சேகரிப்பார்கள் என்றும், விசாரணையின்போது அலட்சியம் அல்லது பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.