தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை உறுதிசெய்யும் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இத்தீர்மானத்தை கொண்டுவந்து முதல்வர் விஜய் பேசுகையில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபுத்தன்மை, அரசாணைகளின் வாயிலாக பின்பற்றப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை.
கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. அனைத்துக்கட்சிகளின் ஆதரவைத் தொடர்ந்து முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
