சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் நீதி வேண்டி கவனவீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ் மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிட்டன் அரசு இவ்விகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

“சர்வதேச நாடுகளின் கவனம் தேவை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நிற்கின்றோம், உண்மை, நீதி மற்றும் மாண்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கு நீதி கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.