மகா ஓயாவில் மூழ்கி நால்வர் பரிதாபப் பலி!
கம்பஹா மாவட்டத்தின் படல்கம பகுதியில் உள்ள மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஓர் இளைஞரும் மூன்று யுவதிகளுமே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
படல்கமவில் உள்ள இறைச்சிப் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று யுவதிகளும் ஓர் இளைஞரும் தங்களது விடுமுறை தினத்தையொட்டி, கார்பன் தொழிற்சாலைக்குப் பின்புறம் உள்ள மகா ஓயாவில் நேற்று மதியம் நீராடச் சென்றனர்.
நீராடிக் கொண்டிருந்தபோது மூன்று யுவதிகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்களுடன் சென்ற இளைஞர் ஓயா நீரில் குதித்தபோதிலும், நால்வரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.
காணாமல்போன நால்வரையும் தேடும் பணியில் பொலிஸாரும் பிரதேச மக்களும் தீவிரமாக ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்குப் பின்னர் நால்வரின் சடலங்களும் ஓயாவில் இருந்து மீட்கப்பட்டன என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இறந்தவர்கள் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பதுளை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
