அனோஜன் விடயம்: அரசு மந்தப்போக்கு! – ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும் என முஜிபுர் வலியுறுத்து.
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும் மந்த கதியிலேயே உள்ளன என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இத்தகையதொரு விவகாரத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சரை விட ஜனாதிபதி அல்லது பிரதமர் நேரடியாகத் தலையிடுவதே பொறுத்தமானது என்றும் வலியுறுத்தினார்.
சிவராசா அனோஜன் விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சவூதி அரேபியாவின் அரச தீர்மானத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் தற்போதைய இலங்கை அரசின் தலையீடுகள் மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றன.
பிரதி வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டால் எந்தவொரு பலனையும் எதிர்பார்க்க முடியாது என்பதால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரிணி அமரசூரியவாவது இதில் நேரடியாகத் தலையிட வேண்டும்.
சவூதி நாட்டின் சட்டங்கள் குறித்த அறிவின்றி மேற்படி இளைஞர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தவறாக இருக்கலாம். எனினும், அவர் மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது பணிவான கோரிக்கையாகும்.
பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவகாரத்தில் முழுமையான கவனம் செலுத்தியுள்ளது. தனிப்பட்ட ரீதியிலும் இதற்காக நான் செயற்படவுள்ளேன்.
அதற்கமைய, சிவராசா அனோஜனுக்கான பொதுமன்னிப்பைக் கோரி, கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்திடம் எழுத்துமூலம் நான் நேரடியாகக் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
இந்த வாரத்துக்குள் அந்தக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளிக்கப்படும்.” – என்றார்.
