சர்வாதிகார அரசைத் தோற்கடிக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும்! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறைகூவல்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை அரசு நிறைவேற்றியுள்ளதன் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமை பறிபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனநாயகம் பாதுகாக்கப்படும் ஒரு நாட்டை உருவாக்குவதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இரவு 22ஆவது திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் இன்று ஜனநாயகத்துக்கு ஓர் இருண்ட யுகம் உருவாகியுள்ளது.
ஜனநாயகத்தை அழித்து அதனைச் சுருக்குகின்ற சர்வாதிகார அரசுக்கு அடித்தளமிட்டு, தனிக்கட்சி ஆட்சியை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
எவ்வித மக்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தாத வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாத்திரம் வைத்துக் கொண்டு இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே இன்று தோல்வியடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தரப்பினரையும், நாட்டின் பெரும்பான்மையான மக்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டு, மக்களுக்கு விரோதமான மற்றும் ஜனநாயகத்தைக் கொலை செய்ய வந்துள்ள தற்போதைய அரசைத் தோற்கடிக்க வேண்டும்.
கட்சித் தலைமையகங்களிலிருந்து ஒற்றை அதிகாரத்துடன் நிர்வகிக்கப்படும் நாடாக அல்லாமல், உண்மையான ஜனநாயகம் பாதுகாக்கப்பட்ட நாடே நாட்டுக்குத் தேவை. அதனை உருவாக்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.” – என்றார்.
