மக்களை ஏழ்மை நிலையில் வைத்து அரசியல் செய்யும் பழக்கத்தில்தான் எதிர்க்கட்சியினர் இன்னும் உள்ளனர் – அமைச்சர் தம்மிக பட்டபெந்தி சாடல்.

நாட்டு மக்களைத் தொடர்ச்சியாக ஏழ்மை நிலையிலேயே வைத்துக் கொண்டு, அதன்மூலம் அரசியல் செய்யும் மனநிலையில்தான் எதிர்க்கட்சியினர் இன்றும் உள்ளனர் என்றும், நிலையான அபிவிருத்திகள் குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை என்றும் சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக பட்டபெந்தி குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை வழங்கி, அதற்குரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது. அந்தத் திட்டங்கள் தற்போது வெற்றியடைந்துள்ளன.

மீதமுள்ள பதவிக்காலத்தில் மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். பொருளாதார ஸ்திரத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்திக் கொண்டுதான் ஏனைய சகல பணிகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதும், அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்குவதும், தகரம் வழங்குவதும் மட்டுமே அபிவிருத்தி என்று எதிர்க்கட்சியினர் கருதுகின்றார்கள். இது முற்றிலும் தவறானது.

மக்களை அடிமட்டத்தில் வைத்துக்கொண்டு, அவர்களைச் சுட்டிக்காட்டி அரசியல் செய்ய முயற்சிப்பது ஒரு முறையற்ற அரசியல் கலாசாரமாகும். இந்தத் தன்மை முற்றாக மாற்றம் பெற வேண்டும். பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாகவே மக்களுக்கு நிலையான நிவாரணத்தை வழங்க முடியும்.

சமூகக் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு அமைச்சு மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும்.

யாருக்கு உண்மையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தற்போது முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே எதிர்கால நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.