தனுஷ்கோடியில் ‘ராம் யாத்ரா’ நாட்டியாஞ்சலி: குழந்தைகளுக்கு காவி உடை அணிவித்ததற்கு வலுக்கும் கண்டனம்!

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ராம் யாத்திரை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், குழந்தைகளைக் காவி உடையில் நடனமாட வைத்ததற்கு கண்டனம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை, அபிநய நாட்டியாஞ்சலி அறக்கட்டளை இணைந்து உலக சுற்றுலா தினத்தையொட்டி, இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடமான தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.

இந்த நிகழ்வில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காவி உடை அணிந்து ராமா், சீதை, லட்சுமணா், ஆஞ்சநேயா் வேடமணிந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதற்கு முன்னர் பல இடங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ’ராம் யாத்திரை’ என்ற பெயரில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதுவே முதல்முறை.

இந்த நிலையில், குழந்தைகளை காவி உடை அணிந்து நடனமாட வைத்ததற்கு இணையத்தில் வலுவான கண்டனம் எழுந்து வருகின்றன.

திராவிடக் கழகத்தின் தலைவர் கி. வீரமணி வெளியிட்டிருக்கு கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் கடந்த 27.09.2026 அன்று சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நடத்தி, உலக சுற்றுலா நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதில், அபிநய நாட்டியாஞ்சலி என்னும் குழுவினருடன் இணைந்து சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘ராம் யாத்ரா’வாம்!

ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன?

நூற்றுக்கணக்கான குழந்தைகள், கொளுத்தும் வெய்யிலில் போதுமான ஏற்பாடுகளின்றி அவதிப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் காவி உடை அணிவித்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறைக்குக் காவி உடை அணிந்து ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன? மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி வகையறாக்களும் ராமேசுவரத்தைத் தொடர்ந்து மதவெறித் தளமாகப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதற்கு மத்திய பா.ஜ.க. அரசும் வழிவகுக்க முயற்சிக்கிறது. இப்போது அந்தப் பாதையில் த.வெ.க. அரசு செல்கிறதா?

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில். ராமநாதபுரம் என்பதை ‘ராமன்நாடு’ என்று ஆங்கிலத்தில் எழுத முயன்று, கடும் எதிர்ப்புகளை எழுப்பி, அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதே ராமன் கதையைச் சொல்லித் தான், தமிழ்நாட்டின் பொருளாதார நலனுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டிய சேதுக் கால்வாய்த் திட்டம், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டது.

குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்?

பிஞ்சுக் குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்? இதற்கு அனுமதி அளித்த சுற்றுலாத் துறை அதிகாரிகள் யார்? மாவட்ட ஆட்சியர் இதில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று சொல்லப்படுகிறதே, என்ன பின்னணி?

தமிழ்நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து, மதவெறிக் காடாக்க நினைக்கும் பா.ஜ.க.வுக்கு ஒத்துழைப்போர் யாராயினும், அவர்களைத் தமிழ்நாட்டு மக்களும் ஏற்கமாட்டார்கள் – வரலாறும் மன்னிக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தனுஷ்கோடியில் ‘ராம் யாத்ரா’ எனும் ராமர் வேடமணிந்த குழந்தைகளைக் கொண்டு ‘ராமநாதபுரம் சுற்றுலாத்துறை’ நாட்டிய நிகழ்ச்சியை சுற்றுலா தினத்திற்காக நடத்தியுள்ளது.

இதே போன்று நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கும், பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும், ஈரோட்டில் தந்தை பெரியாருக்கும், மதுரையில் கண்ணகிக்கும் ‘தமிழ்நாடு சுற்றுலாத்துறை’ அந்தந்த நம்பிக்கைகள்/அறநூல்/கொள்கை அடிப்படையில் நாட்டிய நிகழ்ச்சியை நடத்துவார்களா? அல்லது இந்துத்துவ கும்பலுக்கு கால்கழுவிடும் நிகழ்ச்சியை மட்டும் நடத்துவார்களா?

தவெக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு இந்த சங்கித்தனம் தெரியுமா? அல்லது இதை குறித்து அடிப்படை புரிதல் இல்லாமல் நடக்கிறதா?

தனுஷ்கோடி என்பது இராமாயணத்திற்கானதோ, ராமனுக்கான சொத்தோ, இடமோ அல்ல.. தனுஷ்கோடி என்பது ஈழத்தமிழர்களுக்கும், தமிழ்நாடு தமிழர்களுக்குமான தொப்புள்கொடி உறவுப்பாலம். உயிர்பிழைக்க வந்த தமிழர்களின் துயர வரலாறும், கடலோடி மீனவர்களின் அறிவியல் நுணுக்கமும் சொல்லித்தரும் நிலம். தமிழ்நாட்டை புராண-இதிகாசத்தின் குப்பைத் தொட்டியாக மாற்றுகிறது தவெக அரசு. இதுபோன்ற நடவடிக்கைகளை தொடருமெனில் தவெக அரசு எங்களது கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம். சங்கித்தனத்தை ஒருநாளும் தமிழ்நாட்டில் மே17 இயக்கம் அனுமதிக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.