உண்மையான ஜனநாயகவாதியை திடீரென இழந்துவிட்டது இலங்கை! – மங்களவுக்கு சுரேஷ் இரங்கல்.

“முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உண்மையான ஜனநாயகவாதி. அவரை இலங்கை இன்று திடீரென இழந்துவிட்டது. இந்த நாட்டுக்கு அவர் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றபோது அவரைக் கொரோனா காவுகொண்டது இலங்கைக்குப் பேரிழப்பாகும்.”

இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க. பிரேமச்சந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மங்கள சமரவீரவும் நானும் ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தில் பிறந்து ஒரே காலத்தில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள். அன்றிலிருந்து இன்றுவரை நெருக்கமான உறவுகளைப் பேணுவதிலும் நட்பு பாராட்டுவதிலும் இருவரும் உளத்தூய்மையுடன் செயற்பட்டு வந்தோம்.

மங்கள சமரவீர சிங்கள மேலாதிக்க கடும்போக்காளர்கள் மத்தியில் ஒரு மானுடனாக சகல இன மக்களைப் பற்றிச் சிந்தித்தவர். அன்னாரின் தந்தை ஒரு இடதுசாரி சிந்தனை உடையவர் என்பதால் மங்கள சமரவீரவும் இனத்துவேஷம் இன்றி, இலங்கை ஒரு பல்லின மக்கள் வசிக்கும் நாடு என்பதை ஏற்று அனைவரும் சமத்துவத்துடன் வாழ வேண்டுமென்பதில் அக்கறை செலுத்தி அதற்காக கடினமாக உழைத்து வந்தார்.

பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாழுகின்ற மாத்தறை பாராளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்த போதிலும் இனவேறுபாடின்றி தமது கடமைகளை முன்னெடுத்திருந்தார்.

பழகுவதற்கு இனியவர்; ஒரு நேர்மையான அரசியல்வாதி. இந்த நாட்டுக்கு அவர் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றபோது அவரைக் கொரோனா காவுகொண்டது இலங்கைக்குப் பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவுத் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் நண்பர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.