இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) இன்று காலமானார்.

டில்லியில் வசித்து வரும் பிரணாப் முகர்ஜி கடந்த 9ஆம் திகதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். அதையடுத்து அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சியற்ற நிலையில் இருந்ததால் மறுநாள் டில்லி ஆர்.ஆர். இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்புக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையும், மூளையில் இரத்தக்கட்டி இருப்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து இரத்தக்கட்டியை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரத்தக்கட்டி நீக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் காரணமாக பிரணாப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.

இந்தநிலையில்,செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரணாப் முகர்ஜியின்
வாழ்க்கை வரலாறு…

தனிப்பட்ட வாழ்க்கை:

மேற்கு வங்காள மாநிலம் பிர்ஹம் மாவட்டம் மிரதி என்ற கிராமத்தில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவரது தந்தை கமடா கின்ஹர் முகர்ஜி, தாயார் ராஜ்லெட்சுமி முகர்ஜி. பிரணாப்பின் தந்தை சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், 1952 மற்றும் 1964 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரணாப்பின் மனைவி சுவ்ரா முகர்ஜி. இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஷர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்.
பிரணாப்பின் மூத்த மகன் அபிஜித் முகர்ஜி மேற்கு வங்காளத்தின் ஹன்ஞ்பூர் தொகுதி எம்.பியாகச் செயற்பட்டு வருகிறார்.

கல்வி:

பிர்ஹம் மாவட்டம் சுரி என்ற இடத்தில் உள்ள சுரி வித்யாசாகர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்த பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (அரசியல் அறிவியல்) மற்றும் சட்டக்கல்வியில் பட்டம் பெற்றார்.

1963ஆம் ஆண்டு தான் படித்த அதே வித்யாசாகர் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் சில காலம் பத்திரிக்கையாளராகவும் செயல்பட்டு வந்தார்.

அரசியல் (1969):

மேற்கு வங்காளத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் பிரச்சார உதவிகளை பிரணாப் மேற்கொண்டார். அவரது தேர்தல் பணி செயல்களால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரணாப் முகர்ஜியை 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைத்துக்கொண்டார்.

அந்த ஆண்டே (1969 ஜூலை) பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியின் மூலம் மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. (பின்னர் பிரணாப் தொடர்ந்து 1975, 1981, 1993 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.)

இந்திரா காந்தியின் நம்பிக்கையைப் பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு 1973ஆம் ஆண்டு அமைச்சரவையில் மத்திய தொழில்த்துறை அமைச்சகத்தில் துணை மந்திரி பதவி வழங்கப்பட்டது.

நிதி அமைச்சர் (1982 – 1984):

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் 1982ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு முதல்முறையாக வழங்கப்பட்டது. 1982 – 1984 வரை பிரணாப் நிதி அமைச்சர் பதவிவகித்தார்.

ஆனால் 1984ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மறைவுக்கு பின் பிரதமராகும் அதிக வாய்ப்பு பிரணாப்புக்கு இருந்தது எனக் கருதப்பட்டது. ஆனால், இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றினார்.

இதன்பின், பிரணாப் தனது அமைச்சுப் பதவியை இழந்து மேற்குவங்காள காங்கிரஸ் கமிட்டியை வழிநடத்த அனுப்பப்பட்டார். இந்திரா காந்திக்கு பின் அதிக செல்வாக்கு பெற்றவராக இருந்த பிரணாப்பை ராஜீவ் காந்தி ஓரம்கட்டியதாக தகவல்கள் வெளியானது.

புதிய கட்சி தொடக்கம் (1986):

காங்கிரஸில் இருந்து ஒதுக்கப்பட்ட பிரணாப் 1986ஆம் ஆண்டு ராஷ்டிரய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், 3 ஆண்டுகளுக்குபின் ராஜீவ் காந்தியுடன் நடந்த உடன்பாட்டுக்குப் பின் தனது ராஷ்டிரய சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் பிரணாப் இணைத்துகொண்டார்

வெளியுறவுத்துறை அமைச்சர் (1995 – 1996)

1991ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி மறைவுக்கு பின் வி.பி.நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது.
அப்போது பிரணாப் முகர்ஜி மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் செயற்பட்டார்.

பின்னர் 1995ஆம் ஆண்டு முதல் 1996 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகப் பிரணாப் செயற்பட்டார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் (1998 – 1999):-

1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. அந்த பதவியில் அவர் 1999 வரை (ஒரு வருடம்) நீடித்தார்.

மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் (2000):

பிரணாப் முகர்ஜி 2000ஆம் ஆண்டு மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவராக நியமணம் செய்யப்பட்டர். சுமார் 10 வருடங்கள் அந்தப் பதவியில் நீடித்த பிரணாப் 2010ஆம் ஆண்டு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை இராஜிநாமா செய்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் (2004)

2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தின் ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட்ட பிரணாப் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.

அப்போது சோனியா காந்தி பிரதமராக வாய்ப்புகள் இல்லாததால் பிரணாப்பை பிரதமராக்கும் வாய்ப்புகள் இருந்தன எனத் தகவல்கள் வெளியானது. ஆனால், மன்மோகன்சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனாலும், பிரணாப் முகர்ஜியை இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அந்த வருடமே (2004) அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நியமனம் செய்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் பிரணாப் 2006ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.

அவரது காலகட்டத்தில் இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் முதன்மை நாடாக ரஷியா தொடர்ந்து நீடித்தது.

2005இல் ரஷிய – இந்திய பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய பிரணாப், “ரஷியா இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் கூட்டாளியாக இப்போதும், எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

2004 முதல் 2006 வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பிரணாப் செயற்பட்டார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் (2006 – 2009)

பிரணாப் முகர்ஜிக்கு இரண்டாவது முறையாக 2006ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் அவர் மூன்று வருடங்கள் (2009) வரை நீடித்தார். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா – அமெரிக்கா இடையே சிவில் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிதித்துறை அமைச்சர் (2009 – 2012)

2009ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரணாப் நாட்டின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நிதி அமைச்சராக 2012 வரை மூன்று வருடங்கள் செயற்பட்ட பிரணாப் நாட்டின் வரி தொடர்பான நிலைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இவர் நிதி அமைச்சராகச் செயற்படும்போதுதான் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

குடியரசுத் தலைவர் 2012 – 2017:

2012ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) வேட்பாளராக காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. ஆதரவு வேட்பாளர் சங்மாவை விட பிரணாப் சுமார் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் இந்தியாவின் 13 ஆவது குடியரசுத்தலைவராக பிரணாப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் திகதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிரணாப்புக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய தனது பதவிக் காலத்தில் மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் உட்பட 24 குற்றவாளிகளின் கருணை மனுக்களை பிரணாப் நிராகரித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுடன் குடியரசுத் தலைவர் பணியை நிறைவு செய்த பிரணாப் உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

முக்கிய விருதுகள்:

1984 – உலகின் சிறந்த நிதி அமைச்சர்
2010 – ஆசியாவின் சிறந்த நிதி அமைச்சர்
2008 – பாரத ரத்தனா
2010 – வருடத்தின் சிறந்த நிதி அமைச்சர்
2019 – பத்ம விபூஷன்

Leave A Reply

Your email address will not be published.