பதிலடி கொடுக்க ஆயுதப்படைக்கு முழு சுதந்திரம்: மோடி.

இந்திய ஆயுதப் படைகளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்க்க ஆயுதப்படைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாதத்தை முழு வலிமையுடன் எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமை பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் ஆகியோர் பங்கேற்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கான எதிர்வினையாக அதற்குக் காரணமான பயங்கரவாதிகள் கடும் தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று இந்திய அரசு ஏற்கெனவே சூளுரைத்திருந்தது.
இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.
கடந்த ஐந்து நாள்களாக எல்லையில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தொடர் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்தியா எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று அந்நாட்டு அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இந்த நம்பகமான தகவல் உளவுத்துறை மூலம் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
“எந்தவோர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எதிராக பாகிஸ்தான் உறுதியான பதில் அளிக்கும். இந்த வட்டாரத்தில் ஏதேனும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு இந்தியாதான் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் அட்டாயுல்லா தரார்.