பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவல் வேகமாக அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவும் அபாயம் அதிகரித்து வருகின்றது எனச் சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்புப் பிரசார அணியின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 95 வீத மனிதர்கள் தொழுநோயை ஏற்படுத்தும் பக்டீரியாக்களை எதிர்க்கும் நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, “இலங்கையில் இரண்டு வகையான தொழுநோய்கள் பரவுகின்றன. அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 60 வீதமானோர் பேர் தொற்றக் கூடிய நோய்த்தன்மையைக் கொண்டுள்ளமை வருந்தத்தக்கது” என மருத்துவர் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 500 க்கும் மேற்பட்ட தொழு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நோயாளிகளைக் கண்டறியும் நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தப்பட்ட தருணத்தில், கடந்த மூன்று மாதங்களில், 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 பேரும், கம்பஹாவில் 114 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 82 பேரும் நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.