கட்சி தாவல் விரைவில்! – ரவியின் வீட்டில் இரகசியப் பேச்சு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசைப் பலப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வளைத்துப் போடும் வேலைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதை அறியமுடிகின்றது.

அரசு அதிகமாகக் கண் வைத்திருப்பது சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில்தான். அக்கட்சி உறுப்பினர்கள் பலரை இரகசியமாகச் சந்தித்துப் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்று அறியமுடிகின்றது.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் சஜித் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்ககவுக்கு வாக்களித்திருந்தனர். அவர்களுடனும் அவர்களின் ஏற்பாட்டில் அக்கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களுடனும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கட்சியின் முக்கியஸ்தரான ராஜித சேனாரத்னவும் ரணிலுடன் இணையவுள்ளார் என்று பரவலாகப் பேசப்படுகின்றது. அவர் இப்போதெல்லாம் அரசுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு அப்பால் ஏனைய கட்சித் தலைவர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் ஒருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன். அவருடன் சேர்த்து அவரின் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் முற்றாக இணைப்பதற்கான நகர்வு ஒன்று இடம்பெறுவதை அறியமுடிகின்றது.

மறுபக்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான். அவரும் அரசுக்கான ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் ஜீவன் அமைச்சுப் பதவியை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களை வளைத்துப் போடும் வேலையை முன்னின்று செய்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க.

அவரது வீட்டிலேயே இது தொடர்பான இரகசிய கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என்று அறியமுடிகின்றது.

இணைகின்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்காகவே ஜனாதிபதி புதிய அமைச்சரவையை நியமிக்காமல் இழுத்தடித்து வருகின்றார் என்று ஜனாதிபதி வட்டாரம் தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.