நல்லை ஆதீன முதல்வர் மறைந்தார்! இன்று மாலை இறுதிக்கிரியைகள்!!

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் – இரண்டாவது குருமகா சந்நிதானம் – ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு முருகனடி சேர்ந்தார்.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு 9.45 மணியளவில் அவர் தேகவியோகமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலையே நடைபெறவுள்ளன.

சுகவீனம் காரணமாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு சென்றிருந்த அவர் கொழும்பில் வெள்ளவத்தையில் கம்பன் கோட்டத்தில் தங்கியிருந்து தனியார் வைத்தியசாலையில் உடற்பரிசோதனைகளுக்காகச் சென்றிருந்தார்.

இன்று பரிசோதனை முடிவுகளுடன் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட இருந்த நிலையில், நேற்று இரவு திடீரென இருதயத் தாக்குதலுக்குள்ளான அவர் சற்றுநேரத்திலேயே காலமானார்.

தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், காலதாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும் அவர் கலாநிதி ஆறு. திருமுருகன் மற்றும் ரிஷி தொண்டு நாதன் சுவாமிகள் போன்றோருக்கு எழுத்தில் முற்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார் என்றும் தெரியவருகின்றது. அதன்படி அவரது பூதவுடல் இன்று மாலையே சைவ முறைப்படி தீயுடன் சங்கமிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.