உடனடி விசாரணைக்கு ஜனாதிபதியிடம் சாணக்கியன் கோரிக்கை! – பிள்ளையானுக்கும் பதிலடி.

பிள்ளையானின் ஊழல், மோசடிகளை கண்டறிய விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (22) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நேற்றைய தினம் நான் சபையிலே இல்லாத போது என்னுடைய பெயரைப் பயன்படுத்தி என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். எனவே, அது குறித்த சில தெளிவுபடுத்தல்களை வழங்க வி ரும்புகின்றேன்.

எனக்கு என்னுடைய தாயும் தந்தையும் வைத்த பெயர் சாணக்கியன் இராகுல் இராஜபுத்திரன் இராசமாணிக்கம். அது பற்றி சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் அவர் அதனைப் பற்றி பேசலாம்.

இரண்டாவதாக காணி அபகரிப்பு பற்றி என்னுடைய பெயரைப் பயன்படுத்தி ஒரு விடயத்தை அவர் சொல்லியிருந்தார்.

காணி அபகரிப்பு பற்றி ஏதேனும் இருந்தால் நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன். குழு ஒன்றை நியமித்து நான் என்னிடமுள்ள ஆவணங்களைக் கையளிக்கின்றேன். அதனை ஆராயுங்கள். அதேபோன்று சிவநேசத்துரை சந்திரகாந்தனுடைய ஆவணங்களையும் தருகின்றேன். அதனையும் நீங்கள் விசாரியுங்கள்.

மூன்றாவதாக நான் கனடாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கனடாவுக்கு விசா எடுத்து எப்படிப் போவது என்று தெரியாது என்பதை அவர் நிருபித்துள்ளார். கனடாவுக்கு ஆட்களைக் கடத்தி காசு உழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஆனால், சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சகோதரர் என அழைக்கப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்துகின்றார் என்று சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.