‘துண்டுத் துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என அஃப்தாப் மிரட்டினான்’: 2020ல் ஷ்ரத்தா அளித்த புகார்

அஃப்தாப் என்னை கொல்ல முயன்றான், துண்டுத் துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என மிரட்டினான் என்று 2020ஆம் ஆண்டு காவல்துறைக்கு ஷ்ரத்தா கைப்பட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

முன்னதாக ஆஃப்தப் அமின் பூனவாலா (28) என்பவா் ஷ்ரத்தா வாக்கா் என்பவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லி மெஹரோலியில் உள்ள தனது வீட்டில் மூன்று வாரங்களாக குளிா்சாதன பெட்டியில் வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவா் அந்த உடலின் பாகங்களை நகரின் பல்வேறு இடங்களிலும் வீசியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரை கொன்ற அஃப்தப், ஒரு மோசமான சண்டையின்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போது நீதிபதியிடம் கூறியிருந்தார்.

ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட வீட்டிலிருக்கும் கழிப்பறைதான் காவல்துறையின் மிக முக்கிய சாட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கழிப்பறையின் டைல்ஸ் பகுதிகளுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஷ்ரத்தாவின் ரத்தம் கண்டெடுக்கப்பட்டால், கூட, அதன் மூலம் மரபணு சோதனை நடத்தப்பட்டு, அந்த வீட்டில் அவர் கொல்லப்பட்டார் என்பதை காவல்துறையினரால் உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.

இவ்வளவுக்கும் இடையில், கடந்த 2020ஆம் ஆண்டில், அஃப்தப், தன்னை, அடித்து கொலை செய்ய முயன்றதாகவும் என்னைக் கொன்று துண்டுத் துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் காவல்நிலையம் சென்று ஷ்ரத்தா தன் கைப்பட எழுதி புகார் ஒன்றைப் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில், கடந்த ஆறு மாதங்களாக, அஃப்தப் தன்னை அடித்துத் துன்புறுத்தி வருவதாகவும், ஆனால் காவல்நிலையம் வந்து புகார் அளிக்க தைரியம் வரவில்லை என்றும், நாங்கள் இருவரும் வெகு விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூட ஷ்ரத்தா எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனக்கு ஏதேனும் நேரிட்டால் யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால்.. என்று தொடங்கி, தன்னை அஃப்தாப் கொல்ல நினைப்பது அவரது குடும்பத்தினருக்கும் நன்கு தெரியும் என்றும், தன்னை அவர் அடித்துத் துன்புறுத்துவதையும் அவர்கள் அறிவார்கள் என்றும் ஷ்ரத்தா கூறியிருப்பதால், மீண்டும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கடிதம் 2020ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி ஷ்ரத்தாவால் எழுதி காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் கொடுக்கும்போது, ஷ்ரத்தா தனது பக்கத்துவீட்டு நபருடன் காவல்நிலையத்துக்கு வந்திருந்ததும் அவர் மூலமாகத்தான் இந்த கடிதம் தற்போது காவல்துறைக்குக் கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே, தில்லியில் வசித்து வரும் அஃப்தாப்பின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்திருக்கும் நிலையில், ஷ்ரத்தா 2020ஆம் ஆண்டு எழுதிய கடிதம் தற்போது கைப்பற்றப்பட்டிருப்பதால், மீண்டும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அஃப்தாப்புக்கு நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முழு அறிக்கை இந்த வாரத்துக்குள் காவல்துறையிடம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த உண்மை கண்டறியும் சோதனையின்போது, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து கேள்விகளை கேட்பார்கள். அப்போது, சோதனை நடைபெறும் நபரின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, மூச்சு விடுவது போன்றவை கணக்கிடப்படும். இதை சோதனையின் முடிவுகளை அடிப்படையாக வைத்து, அந்த நபர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவறான தகவலை அளித்திருக்கிறாரா? என்பது முடிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.