எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணியை தொட மறுத்த மருத்துவர்கள்.. பிரசவித்த சிசு பலியான சோகம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் எச்ஐவி(HIV) பாதித்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததால் பிரசவித்த சிசு பரிதாபமாக மரணித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் எச்ஐவி பாதித்த 20 வயது கர்ப்பிணிக்கு கடந்த 21ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த பெண் தேசிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்பின்(NACO) தொடர் கண்காணிப்பில் இருந்தவர் ஆவார். இவரின் தந்தைக்கு பிரசவ கால நடவடிக்கை குறித்து NACO அமைப்பின் அலுவலர்கள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் முதலில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு இளம்பெண்ணை தந்தை பிரசவத்திற்காக அனுமதித்ததுள்ளார். ஆனால், அங்கு ரூ.20,000 கட்டணம் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். பெண்ணின் தந்தையிடம் பணம் இல்லாத நிலையில், பிரோசாபாத் அரசு மருத்துவமனைக்கு பெண்ணை கொண்டு சென்றுள்ளார். ஆனால் இந்த பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்ட மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பெண்ணை தொட கூட மறுத்துள்ளனர். பிற்பகல் 3 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் படுக்கையில் பெண் பிரசவ வலியில் சுமார் 6 மணிநேரம் துடித்துள்ளார். யாரும் கண்டுகொள்ளாத நிலையில், இரவு 9 மணி அளவில் சிசு பிரசவித்துள்ளது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். அதேபோல் NACO அமைப்பும் இந்த விஷயத்தை சீரியசாக கையில் எடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மருத்துவ அலுவலர் உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.