மங்களூரு குண்டு வெடிப்பு: குற்றவாளி வாட்ஸ்ஆப்பில் ஆதியோகி சிவன் படம் வைத்தது ஏன்?

மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் நிகழ்ந்த குக்கா் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி தனது வாட்ஸ்ஆப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்திருந்தது காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு மூன்று நாள்கள் வந்து தங்கியிருந்த போது, குற்றவாளி முகமது ஷாரிக் (24) எடுத்த அந்தப் புகைப்படத்தை தனது வாட்ஸ்ஆப் டிஸ்ப்ளேவில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தனது அடையாளத்தை மறைக்க விரும்பாத குற்றவாளி முகமது ஷாரிக், குக்கர் வெடிகுண்டுடன், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐஎஸ் பயங்கரவாதிகளைப் போல புகைப்படம் எடுத்துக் கொண்டதும், அவர் நடந்து செல்லும் விடியோவும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

தனது வாட்ஸ்ஆப்பில் ஆதியோகி சிவலிங்கத்தின் புகைப்படம் வைக்கபட்டிருப்பது, காவல்துறையினர் விசாரணையை திசைதிருப்பும் முயற்சியா அல்லது அவர்கள் திட்டமிட்டிருக்கும் சதிவேலை பற்றிய குறிப்பா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

குற்றவாளி முகமது ஷாரிக் வீட்டில் இருந்து வெடிகுண்டு செய்வதற்கான பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்திருந்த நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்புத் தொடர்பாக தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மங்களூருவில் நவ. 19-இல் ஆட்டோ ஒன்றில் குக்கா் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோவில் இருந்த பயணி, ஓட்டுநா் காயமடைந்தனா். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என கா்நாடக போலீஸாா் அறிவித்திருந்தனா். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் குற்றவாளி முகமது ஷாரிக் (24) போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சிவமொக்கா மாவட்டத்தின் தீா்த்தஹள்ளியைச் சோ்ந்த முகமது ஷாரிக், கடந்த நவ. 19-ஆம் தேதி மங்களூருவில் வெடிமருந்து குச்சிகள் (டெட்டனேட்டா்), ஒயா்கள், பேட்டரிகள் பொருத்தப்பட்ட குக்கருடன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளாா். அப்போது, அந்த குக்கரில் பொருத்தப்பட்டிருந்த வெடிமருந்து குச்சிகள் வெடித்துள்ளன. இந்தச் சம்பவத்தில் முகமது ஷாரிக் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இன்னும் அவரால் பேசமுடியவில்லை.

இந்தச் சம்பவம் தொடா்பாக மங்களூரு, சிவமொக்கா, மைசூரு, தீா்த்தஹள்ளி உள்ளிட்ட 7 இடங்களில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். மைசூரில் முகமது ஷாரிக் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் திங்கள்கிழமை போலீஸாா் சோதனை நடத்தியபோது, அவரது வீட்டில் வெடிகுண்டு செய்வதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனா்.

இதுகுறித்து மங்களூரில் திங்கள்கிழமை கா்நாடக கூடுதல் டிஜிபி (சட்டம் – ஒழுங்கு) அலோக்குமாா் கூறியபோது,

குக்கா் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள முகமது ஷாரிக்கு கா்நாடகத்துக்கு வெளியே யாருடன் எல்லாம் தொடா்பு இருந்தது என்பதை விசாரித்து வருகிறோம். பெங்களூரு, சுத்தகுன்டேபாளையாவைச் சோ்ந்த அப்துல்மடீன் தஹா தான் முகமது ஷாரிக்கை கையாண்டு வந்திருக்கிறாா். அப்துல்மடீன் தஹா குறித்து தகவல் அளித்தால் ரூ. 5 லட்சம் தருவதாக தேசிய புலனாய்வுமுகமை (என்.ஐ.ஏ.) அறிவித்துள்ளது.

சா்வதேச அளவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளின் தாக்கம் முகமது ஷாரிக்குக்கு இருந்தது தெரியவந்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட பல்வேறு மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து குண்டுவெடிப்பு சம்பவத்தை ஆராய்ந்து வருகிறோம். சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள முகமது ஷாரிக் உயிா்பிழைக்க வேண்டும். அப்போது தான் அவரிடம் பயங்கரவாத செயலுக்கான பின்னணியை அறிந்துகொள்ள முடியும். மைசூரில் முகமது ஷாரிக் குடியிருந்த வாடகை வீட்டில் இருந்து தீப்பெட்டி, சல்ஃபா், பாஸ்பரஸ் போன்ற வெடிமருந்துகள், பேட்டரிகள், ஒயா்கள், நட்டு மற்றும் போல்ட்கள் கிடைத்தன. இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளா் மோகன்குமாருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

முகமது ஷாரிக்கை கையாண்டு வந்த அப்துல்மடீன் தஹாவுடன் தமிழகத்தைச் சோ்ந்த குவாஜா மற்றும் முகமதுபாஷா ஆகியோா் மீது 2022-ஆம் ஆண்டு பெங்களூரு, சுத்தகுன்டபாளையாவில் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல்மடீன் தஹாவை போல, தீா்த்தஹள்ளியைச் சோ்ந்த அராஃபத் அலியும், முகமது ஷாரிக்கை கையாண்டு வந்திருக்கிறாா்.

மங்களூரு, சிவமொக்கா, மைசூரு, தீா்த்தஹள்ளி போன்ற நகரங்களில் உள்ள 7 இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தியுள்ளனா். முகமது ஷாரிக்கின் பின்னணியில் இருந்தவா்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்றாா்.

செல்லிடப்பேசி செயலியின் வாயிலாக சிரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் முகமது ஷாரிக்கு தொடா்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு செய்வது குறித்து அந்த அமைப்பினா் அனுப்பியிருந்த தகவலின் அடிப்படையில், முகமது ஷாரிக் குண்டு தயாரித்ததாக சிவமொக்காவைச் சோ்ந்த போலீஸாா் தெரிவித்தனா். மேம்படுத்தப்பட்ட வெடிபொருளை தயாரித்த முகமது ஷாரிக் கும்பல், அதை துங்கா நதியின் கரையில் சோதனை செய்துள்ளனா். அடுத்தகட்டமாக, கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.