இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளும் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி இன்று நடந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 24-வது ஓவரில் இந்தியாவின் முதல் விக்கெட் விழுந்தது. சுப்மன் கில் 50 ரன்னில் பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஷிகர் தவானும் ஆவுட் ஆனார். டிம் சவுதி பந்தில் கேட்ச் ஆனார். ஷிகர் தவான் 77 பந்தில் 72 ரன் எடுத்தார்.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரிஷப் பண்ட் 15 ரன்னில் (23 பந்து) பெர்குசன் பந்தில் போல்டு ஆனார். அடுத்து களம் வந்த சூர்யகுமார் யாதவ் (4 ரன்) அதே ஓவரில் அவுட் ஆனார்.

அப்போது இந்தியாவின் ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 160 ரன்னாக (32.5 ஓவர்) இருந்தது. அடுத்து ஸ்ரேயாஸ் அய்யருடன், சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா 39.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. ஸ்ரேயாஸ் அய்யர் 56 பந்தில் அரை சதம் அடித்தார். சஞ்சு சாம்சன் 38 பந்தில் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வாஷிங்டன் சுந்தர் களம் வந்தார். அவர் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் அவுட் ஆனார். அவர் 76 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்தது.

வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 37 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், டிம் சவுதி தலா 3 விக்கெட்டும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடியது. ஃபின் ஆலன் – கான்வே தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆலன் 22 ரன்னிலும் கான்வே 24 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த மிட்செல் 11 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுத்து கேப்டன் வில்லியம்சன் – டாம் லாதம் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதலில் நிதானமாக விளையாடிய லாதம் அதன்பின்னர் அதிரடியாக விளையாடினார். 76 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 306 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லாதம் 104 பந்தில் 145 ரன்களுடனும் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 27-ந் தேதி நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.